Thursday, 6 July 2017

ஏன் பிறந்தேன் - 8

நான்மறைக்காடு என்ற ஊர் நடைபயணமாக குறுக்கு வழியில்
சென்றால் குறைவான தூரம்தான். கோடியக்கரைக்காட்டில் பலவித பறவைகளும் பலவித மிருகங்களும் உண்டு. அதிகமாக இருந்தது மான்கள்தான். இதைத் தவிர குதிரைக்கூட்டங்களும் உண்டு. பெண் குதிரை வைத்திருப்பவர்கள் தங்கள் குதிரைக்கு அடையாளக் குறி போட்டு காட்டில் கூட்டத்தில் கலந்து விடுவார்கள். அவைகள் அங்கு மேய்ந்து இன பெருக்கம் செய்து கொண்டிருக்கும். நாட்டில் குதிரைக்குட்டி தேவை படுபவர்களுக்கு தங்கள் குதிரைகள் ஈன்ற குட்டிகளை காண்பித்து பிடித்திருந்தால் விலை பேசுவார்கள். இதில் குதிரைக்குட்டியின் விலையை விட பிடிக்கூலி சமயங்களில் அதிகமாகி விடும். நாட்கணக்கில் குதிரைக்கூட்டத்தை தொடர்ந்து சென்று குட்டியை பிரித்து சேற்றில் விரட்டி கயிறு போட்டு பிடிப்பார்கள். அரபிக்குதிரைகளைப் போன்று கடற்கரை மணலிலும் உப்பங்கழி சேற்றிலும் ஓடிஓடி நல்ல வேகம் இருக்கும். பிடிப்பவர்கள் சற்று கவனக்குறைவாக இருந்ததால் ஆபத்துதான்.  புதிதாக செல்பவர்கள் வழித்தவறிச் செல்ல வாய்ப்பு அதிகம். இந்த காட்டில் விளையும் களாக்காய் சுற்றுப்புற கிராமங்களில் பிரசித்தம். இப்படியாக அங்கிருந்த குண்டு ஒன்று (ஆண் குதிரையை குண்டு என்றும் பெண் குதிரையை பேடா என்றும் சொல்வது பழக்கம்) பிடிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. பகல் நேரங்களில் பல காரணங்களினால் கொண்டு வர முடியாது.  எனவே மாலையில் ஓட்ட ஆரம்பித்து விடியற்காலையில் வந்தது. ஐந்துபாகத்தில் நான்கு கயிறுகளால் கட்டி கொண்டு ஆறுபேர் வந்தார்கள். தனியாக முளையடித்து நான்கு பக்கமும் கட்டப்பட்டது. மனிதர்கள் நடமாட்டத்தை கண்டால் ஆறடி உயரத்திற்கு குதிக்கும். தண்ணீர்  காட்ட இரவு நேரங்களில் நான்கைந்து பேர் ஓட்டிச் சென்று நீச்சலடித்து கொண்டு வந்து கட்டுவார்கள். சுமார் ஒரு வயதிருக்கும். நல்ல உயரம். உடல் முழுவதும் முடி.பிடறி முடியே கழுத்தின் கீழ்வரை இருக்கும். மூன்றாவது நாள் மெதுவாக பின்னங்கால் கட்டு போட பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக கையால் புல்லைக் கொடுத்து பயம் தெளிவிக்கப் பட்டது. ஒரு வாரத்தில் இரண்டு பேர் மட்டும் குளக்கரைக்கு ஓட்டிச் செல்ல முடிந்தது. பதினைந்து நாட்களில் மயிர் பிடிக்க பட்டு ஒரு குதிரையின் அடையாளத்தை பெற்றது. அப்போதெல்லாம் குதிரை சம்பந்தப் பட்ட விஷயங்களில் குதிரைவண்டி கிருஷ்ணமூர்த்தி என்பவர் நிபுநத்வம் வாய்ந்தவர். அவர் வாரம் ஒருநாள் வந்து முழு பயிற்சி கொடுத்து விட்டு எப்படியெல்லாம் பழக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுப்பார். எந்த அடங்காத குதிரையும் அவரிடம் அடங்கும். ஓடாத குதிரையும் ஓடும். அவ்வளவு அழகாக குதிரைகளை கையாளக் கூடியவர். இந்த காட்டுக் குதிரையை மிகவும் அழகாக சிறுவர்கள் ஓட்டினாலும் பத்திரமாக வீட்டில் கொண்டு வந்து சேர்க்கும் அளவிற்கு பழக்கிக் கொடுத்தார்.







இன்னும் வரும்...

No comments:

ஏன் பிறந்தேன்

கத்தரிக்காய்

கத்தரிக்காய் கத்தரிக்காய் என்றதும் நம் நினைவுக்கு வருவது எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு கத்தரிக்காய் கொத்ஸு ஸ்டஃப்டு கத்தரிக்காய் இ...