விதவிதமான உணவுகள் சமைத்து பரிமாற ஒருவர் வீட்டில் பாத்திரங்கள் தேய்க்க ஒருவர் துணிகள் மட்டும் துவைத்து காய வைத்து மடித்து வைக்க ஒருவர், வீட்டு உபயோகத்திற்கென இருந்த கறவை மாடுகளை கறக்க ஒருவர் என பலர் இருந்தனர். இதை தவிர டெப்போவிற்கு பால் சப்ளைக்கென பல மாடுகள், பாரவண்டி,வில்வண்டி, உழவு மாடுகள், காளைகன்றுகள், கிடேரிகள் என மாடுகள் மட்டுமே நூற்றைம்பது இருக்கும். வில்வண்டி முழுவதும் தேக்கால் செய்யப்பட்டது, நுகத்தடி மட்டும் நுனாமரம், எடை இருக்காது மாட்டிற்கு கழுத்து வலிக்கக்கூடாது. சக்கரங்களில் மெலிதான மூன்றல்லது நான்கு இன்ச் கனமான ரப்பர் டயர் ஒட்டப்பட்டு,பார் என சொல்லப்படும் ஆக்ஸிலில் உராய்வு குறைவாக இருக்க சக்கரங்களில் Ball bearing பொருத்தப்பட்டு இருக்கும். வண்டியில் வில் வடிவத்தில் இரண்டு பக்கங்களிலும் Load spring ம், கூண்டின் உள்ளே பெரம்புகள் வளைக்கப்பட்டு பொருத்தப்பட்டிருக்கும்.கூண்டின் பக்கங்களில் விளக்குகள் மாட்ட கொக்கிகளும் அலங்காரமான தட்டு பலகையும் ஏற வசதியான படிக்கட்டு பிடித்துக் கொண்டு ஏற கைப்பிடிகள் பொருட்கள் வைக்க பின்பக்கத்தில் பெட்டியும் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் பணம் போன்றவைகளை பத்திரப்படுத்த ரகசிய அறைகளும் உள்ளே இருக்கும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே ஒரு வில் வண்டி செய்ய பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் ஆகியதாக நினைவு. இந்த வண்டியில் பூட்டுவதற்காக பூரணி எனப்படும் மேற்கத்திய மாடுகள். இரண்டும் ஐந்து ஐந்தறையடி இருக்கும். கொம்புகளே நாலு சாண் இருக்கும். அந்த கொம்புகளில் கொப்பிகள் போடப்பட்டிருக்கும். வெங்கல கொப்பிகள்.சவாரிக்கு முன்பாக கொப்பிகளுக்கு பிராஸோ பாலீஷ் போட்டு பளபளக்கும். கழுத்தில் போட கொத்து சலங்கைகள். தோலால் ஆன பட்டையில் நான்கு மணிகளும் மூன்று சலங்கைகளும் தைக்கப்பட்டிருக்கும். அடியில் உள்ள சலங்கை மட்டும் ஹல்லர் வகையாகும். ஒரு மைல் தூரத்திலேயே சலங்கை சப்தம் கேட்கும்.இது முதலாளி தனியாகவும் குடும்பத்துடன் செல்லும்போது உபயோக படுத்த. மாலைநேரங்களில் செல்ல பட்டறை என சொல்லப்படும் ரேக்ளா வண்டியும் வொம்பளச்சேரி மாடுகளும் அவற்றிற்கென நடுத்தர மூன்று சலங்கை இரண்டு மணி உள்ள கொத்து சலங்கைகள் போடப்படும். பொதுவாக கீழதஞ்சையில் காளைகன்றுகளுக்கு பல் காணும் போதே காய்பிடித்து,காதறுத்து,கொம்பு தீய்த்து சூடு வைத்து விடுவார்கள். எனவே கொப்பிகளுக்கு அவசியம் இல்லை.
இன்னும் வரும் ....
இன்னும் வரும் ....
No comments:
Post a Comment