வண்டியின் பிரதாபம் இப்படி இருக்க, மாடுகளைப் பற்றியும் துளியோண்டு எழுத வேண்டும். ஓங்கோல் காளைகளும் காங்கேயம் காளைகளும் எவ்வளவு ப்ராபல்யமோ அந்த அளவிற்கு இன்றளவும் பேசப்படும் காளைகள் வொம்பளச்சேரி இனமாகும். காளைகளின் லட்சணங்களான நாலுகால் வெள்ளை,நெற்றி வெள்ளை,வடிவால் வெள்ளை,வேண்கால்கள், காய்கருப்பு,சிறுமுகம், சுழிசுத்தம் என பல்வேறு குறிப்புகளுடைய காளைக்கன்றுகளைதான் காளை என தீர்மானிப்பார்கள்.இந்த விஷயத்தில் கூடிய வரை கவனமாக இருப்பார்கள். கூடிய வரை பூரான் சுழியையும் பாடை சுழியையும் தவிர்த்து விடுவார்கள். வொம்பளச்சேரி இனப்பசுக்கள் சினைப்படும்போது ஆகாயத்தை நோக்கும் என சொல்ல கேள்வி. அப்படி என்ன உயர்வு என்று நினைப்பவர்களுக்கான செய்தி. மற்ற வகை மாடுகள் வெளி மனிதர்களை கண்டால் நமக்கென்ன என்றிருக்கும் ஆனால் வொம்பளச்சேரி இன மாடுகள் கட்டுத்தறியில் பழகிய மனிதர்களை தவிர யார் வந்தாலும் ஓசை எழுப்பி ஊரை கூட்டிவிடும்.உரிமையாளன் இல்லாமல் வேற்று மனிதர் வந்து பசுக்களையோ கன்றுகளையோ அவிழ்த்தால் மூக்கணாங்கயிற்றை அறுத்துக்கொண்டு காளைகள் வந்து விடும். பொதுவாக அந்த காளைகளின் துள்ளல்களையும் சீறலையும் எக்காளத்தையும் கண்டவுடன் நாடிகள் ஒடிங்கி விடும்.அந்த காலக்கட்டங்களில் வண்டிமாடுகளை திருடுபவர்கள் பிணைக்காசாக பலநூறுகளை கேட்பார்கள், கேட்ட பிணைகாசை கொடுப்பதில் தவறு ஏற்பட்டால் மேலதஞ்சை மாவட்டத்தில் இருக்கும் முந்திரிகாடுகளுக்கு மாடுகளை ஓட்டிச்சென்று முந்திரி எண்ணையை தடவி வெய்யிலில் நிற்க வைத்து விடுவார்கள் என்றும் நாம் ஊர்உலகமெல்லாம் சுற்றிப் போய் பார்த்தால் ரத்தம் சொட்டச்சொட்ட மேல் தோலில்லாமல் மாடுகள் நிற்குமாம். ஒரு ஜோடி உழவுமாட்டை பறிக்கொடுத்தவனுக்குதான் அந்த வலியை உணர முடியும். இதையும் தவிர திருடிய மாடுகளை ஓட்டி வர வால்களில் கத்தரிக்கிட்டி என்ற ஒன்றைப் போட்டு ஓட்டுவார்களாம். அப்படி கிட்டி போடப்பட்ட மாடுகள். மறுபடியும் நம்மிடம் வந்தால் நடக்கக் கூடமுடியாதாம். விவசாயிக்கு மாடுதானே அவசியம். மாடுகள் இல்லையெனில் கோடை உழவு செய்து பயிறு உளுந்து தெளிக்கலாம் என்ற கனவு பாழ்.குறுவை,தாளடி,சம்பா எல்லாமே அடி வாங்கும்.
எனவேதான் கொட்டிலின் கதவோரத்தில் வொம்பளச்சேரி காளையையோ மாட்டையோ கட்டி வைப்பார்கள்.
எனவேதான் கொட்டிலின் கதவோரத்தில் வொம்பளச்சேரி காளையையோ மாட்டையோ கட்டி வைப்பார்கள்.
No comments:
Post a Comment