Saturday, 3 June 2017

ஏன் பிறந்தேன் 3

ஒரு சில காரணங்களுக்காக ஊர்களின் பெயர்கள் குறிப்பிடப் படவில்லை. ஆனால் இன்றையக் காலகட்டத்தில் மக்கள் தங்களின் வழித்தடங்ளை மாற்றி சென்று கொண்டுள்ளார்கள்.
        மாடுகளை பார்ப்போம். கன்றுகள் பிறந்தவுடன் ஒரு வாரக்காலத்திற்கு பால் அந்த கன்றிற்கு மட்டும்தான்.அந்த பால் மஞ்சள் நிறத்தில் மிகவும் கெட்டியாக இருக்கும். அதில் புரதசத்து, கொழுப்பு சத்து போன்றவை அதிகம். பொதுவாக கறக்க மாட்டார்கள், ஆனால் உடல் நலம் குறைந்வர்கள் அருகில் இருந்தால் அவர்களுக்கு இந்த சீயம் பாலை காய்ச்சி கொடுப்பார்கள். கறவை மாடுகள் நிறைய இருக்கும் வீடுகளில் இரண்டு காம்பு பாலை கன்னுக்குட்டிக்காக விட்டுவிடுவார்கள் மற்றவர்கள் ஒரு காம்பு பாலை விடுவார்கள். ஒரு மாதம் ஆனதும் ஒரு சோடா பாட்டிலில் அரைப்பங்கு வடித்த கஞ்சியுடன் அரைப்பங்கு வெந்நீரும் சிறிது உப்பும் கலந்து பீஃடிங்பாட்டில் ரப்பரை போட்டு குடிக்க வைப்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தானாகவே தன் தாயுடன் சேர்ந்து நீர் அருந்த ஆரம்பிக்கும் வரை கஞ்சி புகட்டுதல் நடக்கும். கோடைக்காலம் ஆரம்பிக்கும் பொழுது எல்லா மாடுகளுக்கும் மொந்தன் வாழைப்பழம் கொண்டுவந்து இரண்டாக வெட்டி விளக்கெண்ணெய் ஊற்றி ஊர வைத்து அடுத்த நாள் காலையில் வாயினுள் தள்ளி விடுவார்கள். ஏனென்றால் கோமாரி என்ற நோய் கோடையில்தான் மாடுகளை தாக்கும். அதிலிருந்து மாடுகளை காப்பாற்ற வாழைப்பழ வைத்தியம்.மூன்று மாதத்தில் இரண்டு முறை கொடுப்பார்கள்.மாடுகளின் வயதை அதன் பற்களை வைத்து கணக்கிடுவார்கள்.இரண்டு பல்,நான்கு பல்,ஆறு பல்,கடைப்பல் என்பது அதன் வயது.இரண்டு வருடம் ஆகும் சமயம் பல் காண்பதற்கு முன் காய்பிடித்து விடுவார்கள். கிடேரிக்கு ஒன்றும் கிடையாது.மேய்ச்சலும் கடலைபிண்ணாக்கு ஊர வைத்த நீரில் நன்கு உமி போக சலித்த தவிடும். காளைகன்றுகளுக்கு காய் பிடித்து காதறுத்து கொம்பு தீய்த்ததும் புழுங்கரிசி கஞ்சியும் வைக்கோலும் வெதுவெதுப்பான நீரும் ஒரு வாரம் பிறகு
இளம் புல். பல் கண்டதும் மூக்கு குத்தி, மூங்கில் நுகத்தடி போட்டு இரண்டு பேர் பிடித்து க்கொண்டு ஓட வேண்டும். பிறகு ஒரு மணல் மூட்டையை நுகத்தடியில் கட்டிபழக்குவார்கள். இதில் மிகவும் முக்கியமான விஷயம் ஜோடி சேர்ப்பது. நம் வீட்டு காளைக்கன்றின் உயரம், முகம், கனப்பரிமாணங்களுக்கு ஏற்றபடி ஜோடி கிடைக்க வேண்டும்.அப்போதுதான் உழவிலும் வண்டியிலும் நன்றாக போகும்.இரண்டு கன்றுகளும் ஒன்றுக்கொன்று அனுசரித்து ஓட வேண்டும். கொஞ்சம் துடிப்பாக ஓடுவதை இடது பக்கம் போட வேண்டும்.பழக்கும் போது அடித்தும் சத்தம் போட்டும் ஓட்டி பழக்கக் கூடாது.சீராக நடக்க விட்டு,மெதுவாக ஓடவிட்டு பழக்க வேண்டும்.

இன்னும் வரும்...


No comments:

ஏன் பிறந்தேன்

கத்தரிக்காய்

கத்தரிக்காய் கத்தரிக்காய் என்றதும் நம் நினைவுக்கு வருவது எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு கத்தரிக்காய் கொத்ஸு ஸ்டஃப்டு கத்தரிக்காய் இ...